சென்னை சுப்பர் கிங்ஸை 127 ஓட்டங்களுக்கு சுருட்டிய ராஜஸ்தான் றோயல்ஸ் 8 விக்கெட்களால் அமோக வெற்றி

111

குவாஹாட்டி பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 127 ஓட்டங்களுக்கு சுருட்டிய ராஜஸ்தான் ரோயல்ஸ், 7.5 ஓவர்கள் மீதமிருக்க 8 விக்கெட்களால் இலகுவாக வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 127 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

போட்டியில் சென்னை அணியின் தொடக்கம் பலவீனமாக அமைந்தது. ருத்துராஜ் கய்க்வாட் (6), அயுஷ் மஹாத்ரே (0), மெத்யூ ஷோர்ட் (2), சஞ்சு செம்சன் (6) உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விரைவில் வெளியேறினர். பவர் ப்ளே முடிவில் 4 விக்கெட்களுக்கு 41 ஓட்டங்கள் மட்டுமே இருந்தது.

சர்பராஸ் கான் (17), கார்த்திக் ஷர்மா (18) சிறிய பங்களிப்பு செய்தாலும் நீடிக்கவில்லை. பின்னர் ஜெமி ஓவர்ட்டன் 43 ஓட்டங்கள் பெற்று கடைசி விக்கெட்டில் அன்ஷுல் கம்போஜுடன் 33 ஓட்டங்கள் சேர்த்து அணியை சுமாரான நிலைக்கு கொண்டு வந்தார். பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா, ஜொஃப்ரா ஆச்சர், நந்த்ரே பேர்கர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

127 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் ரோயல்ஸ் 12.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 128 ஓட்டங்கள் எடுத்து வெற்றியடைந்தது. இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி அதிரடியாக அரைசதம் விளாசி அணிக்கு வேகமான தொடக்கத்தை வழங்கினார்; அவர் 17 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸ்களுடன் சிறப்பாக விளையாடினார்.

யஷஸ்வி ஜய்ஸ்வால் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முன்னேற்றம் உறுதியான நிலையில் இருக்கும் நிலையில், சென்னை அணிக்கு அடுத்த போட்டிகளில் மீண்டும் எழுச்சி தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது.