சென்னை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி.. 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது RCB.!

121

ஐபிஎல் 2026 தொடரில் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடிய சென்னை அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் பவுலிங்கைத் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது.

ஆர்சிபி அணியில் பிலிப் சால்ட் 46 ரன்களும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களும், கேப்டன் ரஜத் பட்டிதார் 48 ரன்களும் எடுத்தனர். டிம் டேவிட் 25 பந்துகளில் அதிரடியாக 70 ரன்கள் குவித்து அணியின் மொத்தத்தை உயர்த்தினார்.

சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில், இது சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராக பதிவானது.

251 ரன்கள் என்ற கடின இலக்கைத் துரத்திய சென்னை அணி தொடக்கத்திலேயே சஞ்சு சாம்சன், ருதுராஜ் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோரின் விக்கெட்களை இழந்து பின்னடைவை சந்தித்தது. சர்பராஸ் கான் 50 ரன்கள் எடுத்தாலும், அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

இந்த தோல்வியுடன் சென்னை அணி தொடரில் தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அடுத்த போட்டிகளில் வெற்றி அவசியமாகியுள்ளது.