செங்கலடியில் யானை அட்டகாசம்: கடை சேதம், மக்கள் அச்சத்தில்…!

235

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 05) அதிகாலை காட்டு யானை ஒன்று நகருக்குள் நுழைந்து கடை ஒன்றை சேதப்படுத்தியுள்ளது. கறுத்தப்பாலம் வழியாக நகருக்குள் வந்த யானை, விவசாயப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை உடைத்து அங்கிருந்த அரிசி மூடைகளை சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், யானை அப்பகுதியில் உள்ள மதில்கள், தென்னை மற்றும் வாழை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக கறுத்தப்பாலம் பகுதியில் தங்கியிருந்த இந்த யானை, சம்பவ நாளில் செங்கலடி–பதுளை வீதியூடாக நகருக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அப்பகுதி மக்கள் இணைந்து யானையை விரட்டியடித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அண்மைக்காலமாக வவுணதீவு, ஆயித்தியமலை, கரடியனாறு, கொக்கட்டிச்சோலை மற்றும் வெல்லாவெளி பகுதிகளில் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், எதிர்காலத்தில் மனித உயிர் மற்றும் சொத்துகளுக்கு மேலும் அபாயம் ஏற்படும் எனக் கவலை தெரிவிக்கப்படுகிறது.