சுரேஷ் சலே தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் பரபரப்புத் தகவல்!

43

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று வெளிப்படுத்திய தகவல்களுக்கமைய, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முதன்மை சூத்திரதாரி சுரேஷ் சலே என பெயரிட்டு முன்னணி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையின் முன்னாள் அரச புலனாய்வுத்துறை பிரதானியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடையவர் என நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதாக கூறப்படும் புதிய மற்றும் உறுதியான சான்றுகள் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ளன.

நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று ஆற்றிய உரை குறித்து பல்வேறு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் உளவுத்துறைத் தலைவர், பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதி செய்தார் என்பதற்கான கணிசமான ஆதாரங்கள் இருப்பதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாக இந்திய NDTV ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியாவின் The Star நாளிதழில் சலே சதி செய்து மூலோபாய ரீதியாக வழிநடத்தினார் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், 279 பேர் உயிரிழந்த இத்தாக்குதலில் தேவாலயம் ஒன்றின் இலக்கைக் கூட அவர் அடையாளம் காட்டியுள்ளார் என அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கமொன்று அவருக்கு எதிராக சுமத்தியுள்ள முதலாவது நேரடி குற்றச்சாட்டு இதுவென அந்த அறிக்கை மேலும் விவரித்துள்ளது.

அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டிய Firstpost இணையதளம், தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் சலே தீவிரவாத தகவல் வழங்குநர்களைப் பயன்படுத்தி தேவாலயங்கள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை எவ்வாறு சேகரித்தார் என்பது குறித்தும், இந்தத் துயரச் சம்பவத்திலிருந்து ஏழு ஆண்டுகளின் பின்னர் சட்டரீதியான இறுதித்தீர்வை நோக்கிய அழுத்தம் இதன் மூலம் தீவிரமடைந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மைய உணவுத் தவிர்ப்புப் போராட்டம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சலேயின் உடல் நிலையை மதிப்பிடுவதற்காக, கொழும்பு நீதிமன்றம் ஐந்து மருத்துவ நிபுணர் அடங்கிய குழுவொன்றை நியமிக்க உத்தரவிட்டுள்ளதாக The Hindu நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியதாகவும் The Hindu நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. All India Radioவும் அதே போன்ற செய்தியை வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சலே வழிநடத்தினார் என இலங்கை அரசாங்கம் முதன்முறையாக நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளதாக India Today தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளதுடன், சலே இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்புகள் மூலம் மீண்டும் உலகளாவிய அவதானம் பிரித்தானியாவின் Channel 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தின் பக்கம் திரும்பியுள்ளதாக Indian Express நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னாள் புலனாய்வுத் தலைவர் தாக்குதல்களை வழிநடத்தினார் என அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும், சலே தனது சட்டத்தரணி ஊடாக அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாகவும் Reuters செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

தாக்குதல்கள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டமை மற்றும் சதித் திட்டம் மற்றும் அதற்கு ஆதரவளித்தமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறித்து AFP நிறுவனம் அறிக்கை செய்துள்ளது.

அவரது தடுப்புக்காவல் நிலை குறித்து கவனம் செலுத்தியுள்ள Al Jazeera, அவர் தாக்குதல்களுக்கு உதவியதாகவும் சதி செய்ததாகவும் புலனாய்வாளர்கள் குற்றம் சுமத்துவதாகவும், அவர் அதனை மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் வழிநடத்தல் மற்றும் தேவாலய இலக்கை அடையாளம் கண்டமை போன்ற குற்றச்சாட்டுகளை அறிக்கை செய்துள்ள The Straits Times நாளிதழும், அவரது மறுப்பை அதில் உள்ளடக்கியுள்ளது.