“சுத்தமான நல்லூர்” கடும் கண்காணிப்பு நடவடிக்கை – 5 மாதத்தில் ரூ.4.20 லட்சம் அபராதம்!

220

5 மாதங்களில் ரூ.4,20,000 வருமானம் – பொது இடங்களில் குப்பை வீசுவதை கட்டுப்படுத்த நல்லூரில் கடும் நடவடிக்கை.

தமிழ் மக்கள் கூட்டணியின் ஆளுகைக்கு உட்பட்ட நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் பொது இடங்களில் சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பலனை தந்துள்ளது.

முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்பட்டு வந்த 11 முக்கிய பொது இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கமராக்கள் மூலம் கழிவுகள் வீசுபவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த செயல்திட்டத்தின் விளைவாக, கடந்த ஐந்து மாதங்களில் ரூ.4,20,000-க்கு மேற்பட்ட தொகை அபராத வருமானமாக நல்லூர் பிரதேச சபைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் குப்பை கொட்டும் செயற்பாடுகள் கணிசமாக குறைந்துள்ளன.

இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் நல்லூர் பிரதேச செயலகம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், இலங்கை மின்சார சபை மற்றும் கிராம சேவையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக தவிசாளர் பத்மநாதன் மயூரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவரும் நிலையிலும் சிலர் தொடர்ந்து பொது இடங்களில் கழிவுகளை வீசிவருகின்றனர். எனவே, இச்செயற்பாட்டை முற்றாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் பல கண்காணிப்பு கமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக குப்பை வீசுவோரின் விவரங்கள் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் மேலும் தெரிவித்துள்ளார்.