சீன மற்றும தென்கொரிய தலைவர்கள் சந்திப்பு; பிராந்திய அரசியல் சூழலில் திருப்பம்!

128

சீனா – தென் கொரியா உச்சி மாநாடு | பிராந்திய அரசியல் சூழலில் முக்கிய திருப்பம்

 

சீனாவுடனான உறவுகளில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்து, பொருளாதார மற்றும் அரசியல் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில், தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் இன்று (05) சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள லீ ஜே மியுங், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள், பிராந்திய பாதுகாப்பு, மேலும் கொரிய பாப் கலாச்சாரம் (K-Pop) மீது சீனாவில் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அதிகாரப்பூர்வமற்ற தடைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சீ ஜின்பிங் தென் கொரியாவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில், அதன் பின்னர் நடைபெறும் இரண்டாவது நேரடி சந்திப்பு இதுவாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய பொருளாதார பங்காளியாக சீனா விளங்குவதால், அரசியல் பதற்றங்கள் அதிகரிக்கும் காலங்களில் சீனா தனது பொருளாதார உறவுகளை அரசியல் “ஆயுதமாக” பயன்படுத்தாது என்ற உறுதியை லீ ஜே மியுங் எதிர்பார்ப்பதாக அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, தாய்வான் விவகாரத்தை மையமாகக் கொண்டு சீனா – ஜப்பான் இடையே சமீப வாரங்களில் ராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ளது. தாய்வான்மீது சீனா தாக்குதல் நடத்தினால், ஜப்பான் தனது தற்காப்புப் படைகளின் மூலம் பதிலடி வழங்கும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஜப்பானுக்கு எதிரான சீனாவின் கண்டனங்கள் அதிகரித்துள்ளன.

 

ஜப்பானைப் போலவே, தென் கொரியாவும் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாகும். அமெரிக்கா தாய்வானுக்கு அரசியல் ஆதரவும், பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி வரும் நிலையில், இந்த பிராந்திய பதற்றம் தென் கொரியாவை சங்கடமான அரசியல் நிலைக்கு தள்ளியுள்ளது.

இந்தப் பின்னணியில், லீ ஜே மியுங் மேற்கொண்டுள்ள சீனப் பயணம், கிழக்கு ஆசிய அரசியல் சமநிலையிலும், தென் கொரியாவின் எதிர்கால வெளிநாட்டு கொள்கையிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகக் கருதப்படுகிறது.