சீன அமைச்சர் திடீர் இலங்கை விஜயம்: புதிய முதலீடுகள் பேசப்படும்?

144

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று இலங்கை வருகை – முதலீடுகள் மற்றும் திட்ட முன்னேற்றம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை.

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi) இன்று (12) குறுகிய உத்தியோகப்பூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு வருகிறார். ஆப்பிரிக்க நாடுகளுக்கான நான்கு நாள் விஜயத்தை முடித்துவரும் அவர், கொழும்பில் பல உயர்மட்ட சந்திப்புகளை மேற்கொள்வார்.

வாங் யி இலங்கையில் இருந்து புறப்படும் முன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் கொழும்பு துறைமுக நகர மேம்பாடு உள்ளிட்ட சீன ஆதரவு திட்டங்களின் முன்னேற்றம், அவற்றை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள், மேலும் புதிய சீன முதலீடுகள் பற்றிய ஆலோசனைகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது மற்றும் கொழும்புக்கு மேலதிக விமான சேவைகளை ஏற்படுத்துவதற்கு சீனாவின் ஒத்துழைப்பை இலங்கை எதிர்பார்க்கிறது.


இந்த விஜயம், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்த ஒரு மாதத்திற்குள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் தென் ஆசிய பிராந்தியத்தில் இரு பெரிய நாடுகளின் அரசியல் & பொருளாதார ஈடுபாடு அதிகரித்திருப்பதை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.