சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய 29 முக்கிய குற்றவாளிகள் கைது.!!

124

 

நாட்டுக்குள் சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்தி வந்த சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய 29 முக்கிய குற்றவாளிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திருகோணமலையில் இன்று புதன்கிழமை (25) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் வெளியிடப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் பலர் வெளிநாடுகளில் பதுங்கியிருந்த நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்தோனேசியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று விசேட நடவடிக்கைகள் மூலம் அவர்களை கைது செய்துள்ளனர். குறிப்பாக, இந்தோனேசியாவிலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்கள் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருகோணமலைத் துறைமுகம் உள்ளிட்ட கரையோர பகுதிகள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். முன்னர் இந்த விநியோகச் சங்கிலியை முறியடிக்க முடியாத நிலையில் இருந்த போதிலும், தற்போது உயர்மட்ட கடத்தல்காரர்களை குறிவைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் எதிர்காலத்தில் கடத்தல் நடவடிக்கைகள் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.