சர்க்கரை நிறுத்தினால் மனஅழுத்தம் வருமா? உண்மை என்ன?

104

ஒழுங்கான உணவு நேரம் கடைப்பிடிப்பது, போதுமான தூக்கம் பெறுவது, தினசரி லேசான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வது போன்றவை உடல் மற்றும் மனநலத்தை சமநிலையில்வைக்க உதவுகின்றன.

சமீப காலமாக உடல்நலத்தை முன்னிட்டு பலரும் ‘நோ-சுகர் டயட்’ எனப்படும் இனிப்பைத் தவிர்க்கும் உணவுமுறையைத் தேர்வு செய்து வருகின்றனர். காபி, டீ போன்ற பானங்களில் சர்க்கரை சேர்ப்பதை நிறுத்துவது முதல் இனிப்புகள், பேக்கரி பொருட்கள், இனிப்பு பானங்கள் போன்றவற்றை முழுமையாகத் தவிர்ப்பது வரை பலர் இந்த மாற்றத்தை மேற்கொண்டு வருகின்றனர். உடல் எடை குறைக்க, நீரிழிவு நோய் அபாயத்தை கட்டுப்படுத்த, மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணமே இந்தப் பழக்கத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சிலர் சர்க்கரையை திடீரென நிறுத்திய பிறகு மனஅழுத்தம், எரிச்சல், உடலில் சோர்வு, கை-கால்களில் நடுக்கம், தலைசுற்றல் போன்ற உணர்வுகளை அனுபவிப்பதாகக் கூறுகின்றனர். இதுபற்றி விளக்கம் அளிக்கும் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் கூறுவதாவது:

“நோ-சுகர் டயட்” என்பது பொதுவாக சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்ப்பதையே குறிக்கிறது. அதாவது தேநீர், காபி, இனிப்பு பானங்கள், கேக், பிஸ்கட் போன்ற உணவுகளில் சேர்க்கப்படும் சுத்தமான சர்க்கரையைத் தவிர்ப்பதே இந்த உணவுமுறையின் அடிப்படை. ஆனால் அதனால் உடலுக்குத் தேவையான சக்தி முற்றிலும் குறைந்து விடும் என்று அர்த்தமில்லை. காரணம், நம்முடைய உடலுக்கு தேவையான சக்தி கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்பு போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகளின் மூலம் கிடைக்கிறது. அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்ற உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்கள் உடலில் மெதுவாக குளுக்கோஸாக மாறி சக்தியை வழங்குகின்றன.

சர்க்கரையை மட்டும் நிறுத்தியதாலே உடலில் நடுக்கம் போன்ற அறிகுறிகள் சாதாரணமாக ஏற்படுவதில்லை. ஆனால் உடலில் குளுக்கோஸ் அளவு மிகக் குறைவாகும் போது ‘ஹைப்போகிளைசீமியா’ எனப்படும் நிலை உருவாகலாம். குறிப்பாக நீண்ட நேரம் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, மிகக் குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை மட்டும் சாப்பிடுவது, அல்லது திடீரென கடுமையான டயட் முறைகளைத் தொடங்குவது போன்ற காரணங்களால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையக்கூடும். அப்போது பலவீனம், மயக்கம், நடுக்கம், வியர்வை, தலைசுற்றல், கவனம் குறைவு போன்ற அறிகுறிகள் தோன்றலாம். சில சமயங்களில் இதய துடிப்பு அதிகரிப்பது போன்ற உணர்வுகளும் தோன்றலாம். எனவே உணவுகளை முறையாகவும் சமநிலையுடனும் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

அதே நேரத்தில், இனிப்புகளைத் தவிர்ப்பதால் நேரடியாக மனஅழுத்தம் அல்லது மன எரிச்சல் ஏற்படும் என்பது மருத்துவ ரீதியாக உறுதியாக நிரூபிக்கப்பட்ட விஷயம் அல்ல. ஆனால் நாம் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளை திடீரென நிறுத்தும்போது மனதில் ஒரு குறைபாடு உணர்வு உருவாகலாம். இது உளவியல் ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்தி எரிச்சல், மனஅமைதி குறைவு, மனநிலை மாற்றம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக நீண்ட காலமாக அதிக இனிப்பு உணவுகளைச் சாப்பிட்டு வந்தவர்கள் திடீரென அதை நிறுத்தினால், ஆரம்பத்தில் சில நாட்கள் அல்லது வாரங்கள் இந்த மாற்றத்திற்குப் பழக நேரம் எடுத்துக்கொள்ளலாம்.

எனவே எந்த டயட்டையும் பின்பற்றும்போது உடலையும் மனதையும் அதற்கேற்ப மெதுவாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உணவில் சமநிலை மிகவும் முக்கியம். புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள், பயறு வகைகள், முட்டை, பால், தயிர், பன்னீர் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், கீரை வகைகள், முழுதானியங்கள், மற்றும் சிறுதானியங்கள் உடலுக்கு நீண்ட நேரம் சக்தி வழங்குவதோடு ரத்தச் சர்க்கரை அளவை திடீரென உயர்வதைத் தடுக்கும். இதனால் பசியும் நீண்ட நேரம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

மேலும் தினமும் பழங்களை உணவில் சேர்ப்பதும் மிகவும் முக்கியம். இயற்கை சர்க்கரை கொண்ட பழங்கள் உடலுக்கு தேவையான சக்தியையும் வைட்டமின்களையும் தாதுச்சத்துகளையும் வழங்குகின்றன. குறிப்பாக வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு போன்ற பழங்கள் உடலுக்கு ஆரோக்கியமான சக்தியை அளிக்க உதவுகின்றன. அதேபோல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் உடலின் செயல்பாடுகளை சீராக வைத்திருக்க முக்கிய பங்காற்றுகிறது. உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சோர்வு மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு பானங்கள், சோடா, மற்றும் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்ல ஆரோக்கிய பழக்கமாகும். ஆனால் சர்க்கரையை முழுமையாகத் தவிர்க்கும் முயற்சியில் உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளை குறைத்து விடக் கூடாது. அதற்குப் பதிலாக மெதுவாக பழக்கங்களை மாற்றிக் கொள்வது நல்லது. உதாரணமாக, காபி அல்லது டீயில் சர்க்கரை அளவை படிப்படியாகக் குறைப்பது, இனிப்பு பானங்களுக்கு பதிலாக தண்ணீர் அல்லது இயற்கை பழச்சாறு குடிப்பது போன்ற மாற்றங்கள் உடலுக்கு எளிதாக ஏற்றுக்கொள்ளப்படும்.

இதற்கு மேலாக, ஒழுங்கான உணவு நேரம் கடைப்பிடிப்பது, போதுமான தூக்கம் பெறுவது, தினசரி லேசான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வது போன்றவை உடல் மற்றும் மனநலத்தை சமநிலையில்வைக்க உதவுகின்றன. குறிப்பாக அதிகமாக உடற்பயிற்சி செய்யும் நபர்கள் அல்லது நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுமுறையில் மாற்றங்களை மேற்கொள்ளும்