சமீர் ரிஸ்வி அதிரடி அரைசதம்: லக்னோவை வீழ்த்தி டெல்லி கெப்பிட்டல்ஸ் வெற்றி

164

லக்னோவ் எக்கானா கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (01) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணியை 6 விக்கெட்களால் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி வீழ்த்தியது. 142 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய டெல்லி, 17.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைப் பெற்றது.

ஆரம்பத்தில் டெல்லி கெப்பிட்டல்ஸ் 5 ஓவர்களுக்குள் 4 முக்கிய விக்கெட்களை இழந்து 30 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்ததால் தோல்வி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 22 வயதான சமீர் ரிஸ்வி மற்றும் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் இணைந்து 5ஆவது விக்கெட்டில் பிரிக்கப்படாத 119 ஓட்டங்களை சேர்த்தனர்.

ரிஸ்வி 47 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களையும், ஸ்டப்ஸ் 39 ஓட்டங்களையும் ஆட்டம் இழக்காமல் பெற்றனர். நிட்டிஷ் ராணா 15 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை வீரர் பெத்தும் நிஸ்ஸங்கா தனது அறிமுகத்தில் 1 ஓட்டத்துடன் வெளியேறினார். பந்துவீச்சில் பிறின்ஸ் யாதவ் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

முன்னதாக லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 18.4 ஓவர்களில் 141 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. மிச்செல் மார்ஷ் 35 மற்றும் அப்துல் சமாத் 36 ஓட்டங்கள் எடுத்தனர். ஷாபாஸ் அஹ்மத் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் லுங்கி நிகிடி மற்றும் தங்கராசு நடராஜன் தலா 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்த வெற்றியுடன் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு முக்கிய முன்னேற்றம் கிடைத்துள்ளதுடன், சமீர் ரிஸ்வி ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.