சட்டவிரோத பீடி இலை கடத்தல்: அரசுக்கு வருமான இழப்பு – உடனடி நடவடிக்கை கோரிக்கை!

77

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்படும் பீடி இலைகளால் அரசாங்கத்திற்கு ஏற்படும் பாரிய வருமான இழப்பைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம், பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்கின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பீடி இலைகளை சட்டபூர்வமாக இறக்குமதி செய்யும் போது வரி அறவிடப்பட்டாலும், பெருந்தொகையான இலைகள் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக கொண்டு வரப்படுவதால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், இத்தகைய சட்டவிரோத இறக்குமதிகள் உள்நாட்டு பீடி உற்பத்தியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டது.

இதனால், சட்டவிரோதமாக பீடி இலைகளை பயன்படுத்தி தொழில் செய்பவர்களிடமிருந்து உரிய வரி வசூலிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனை சமாளிக்க நிதி அமைச்சு முறையான வரி அறவீட்டு அமைப்பை உருவாக்க வேண்டும் என குழு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, சுங்கம், மதுவரித் திணைக்களம், பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள் இணைந்து கடத்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியமும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.