சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை: எரிக்கப்பட்ட நிலையில் கார் மீட்பு.!!

81

தலங்கம – அகுரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் கார் ஒன்று, காலி – அகலிய பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுஹேகொடை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி, காலி, அகலிய பகுதியில் உள்ள வீதியோரம் ஒன்றில் இந்தக் கார் கைவிடப்பட்டிருந்தது. பொலிஸார் அங்கு சென்றபோது கார் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்டவர்கள் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் “கரந்தெனிய சுத்த” என அழைக்கப்படும் ஜயலத் சில்வா என்ற பாதாள உலகக் குழுத் தலைவரால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொல்லப்பட்ட சட்டத்தரணி முன்னர் “கரந்தெனிய சுத்த” சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். எனினும், பின்னர் அவருக்குப் பகையான “லோகு பெட்டி” என்ற மற்றொரு பாதாள உலக நபருக்காக ஆஜராகியதே இந்தப் படுகொலைக்குக் காரணமாக இருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.