சச்சிதானந்தம் சிக்கலில்? சிவஞானத்தின் 50 கோடி மானநஷ்ட வழக்கு!

159

சி.வி.கே. சிவஞானம் அவர்கள், இந்து பிரமுகர் மறவன்புலவு க. சச்சிதானந்தம் அவர்களுக்கு எதிராக 50 கோடி ரூபாய் மான நஷ்டம் கோரி சட்டத்தரணி மூலம் நிபந்தனைக்கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த ஜனவரி 26ஆம் திகதி யாழ்ப்பாண ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தம்மை குறிவைத்து அடிப்படையற்ற மற்றும் தீய நோக்கத்துடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக சிவஞானம் குற்றம்சாட்டியுள்ளார்.

குறித்த செய்தியாளர் சந்திப்பில், 1974ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1974 இறுதி நாள் நிகழ்வின் போது உயிரிழந்த 11 பேரின் மரணத்துக்கு சிவஞானமே காரணம் என்ற வகையில் மறவன்புலவு சச்சிதானந்தம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இக்குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், சமூகத்தில் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டவை என்றும் சிவஞானத்தின் சட்டத்தரணி கேசவன் சயந்தன் நிபந்தனைக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 14 நாட்களுக்குள் 50 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கப்படாவிட்டால், தகுந்த அதிகாரம் கொண்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என அந்தக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி பதில் தலைவராக உள்ள சிவஞானத்தின் இந்த நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் மேலும் கவனத்தை ஈர்க்கும் எனக் கூறப்படுகிறது