கொள்கை வட்டி வீதங்களில் மாற்றமில்லை – இலங்கை மத்திய வங்கி.

121

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்ததன் பின்னர், கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி 7.75% ஆகவே வைத்திருக்கத் தீர்மானித்துள்ளது. இந்த முடிவு செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலவரங்கள், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மைகள் இந்த தீர்மானத்திற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போதைய பொருளாதார தரவுகளின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பணவீக்கம் 5% என்ற இலக்கை அடையும் என மத்திய வங்கி எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதும், நடுத்தர காலத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதும் முக்கிய இலக்குகளாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எதிர்கால பொருளாதார முன்னேற்றங்களின் அடிப்படையில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் வாய்ப்பும் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.