கொக்கட்டிச்சோலை சம்பவத்தில் பொதுமக்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும்.!

165

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளுவினாமடு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இடம்பெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (22) மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனுடன் சம்பவம் தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கிணற்றிலிருந்து ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டதோடு, மற்றொரு பெண்ணின் சடலம் அதே இடத்தில் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

ஆரம்ப விசாரணைகளில், சந்தேக நபர்கள் இரு பெண்களையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று, போதைப்பொருள் கலந்த பானம் கொடுத்து மயக்கமடையச் செய்து, அவர்களிடம் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்த பின்னர் நீர் நிரம்பிய கிணற்றுக்குள் தள்ளியுள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண் பெப்ரவரி 28ஆம் திகதி வெல்லாவெளி பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். உயிருடன் மீட்கப்பட்ட பெண் தனது மூன்று வயது குழந்தையுடன் பயணம் செய்தபோது குறித்த சந்தேக நபர்களால் ஏமாற்றப்பட்டு இதே முறையில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். குழந்தை பின்னர் வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளை வைத்திருந்ததும் விற்பனை செய்ததும் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட நகைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் இன்று (23) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.