கெக்கிராவவில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: 2 பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்.!

113

அநுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் வாகன உரிமையாளர் ஒருவரிடம் பலவந்தமாக 5,000 ரூபாய் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அநுராதபுரம் வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவா பத்திரணவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கெக்கிராவ பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகிய இருவரே இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி கெக்கிராவ பகுதியில் போக்குவரத்து கடமையில் இருந்தபோது, வாகன உரிமையாளர் ஒருவரை அச்சுறுத்தி 5,000 ரூபாய் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த 26ஆம் திகதி முதல் அவர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணை முடிவுகளின் அடிப்படையில் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.