கூரிய ஆயுதம் மற்றும் போதைப்பொருளுடன் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர் கைது.!

197

வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை மற்றும் சட்டவிரோதப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ‘வல்பொல லாலா’ என அழைக்கப்படும் 38 வயதுடைய சுமித்ரா ஆராச்சிகே லலந்த குணவர்தன செவ்வாய்க்கிழமை (24) முல்லேரியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வல்பொல சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் போது, அவரிடமிருந்து 10 கிராமுக்கு மேற்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருளும் தராசு ஒன்றும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த தராசு மாலபே பகுதியில் உள்ள சில்லறை கடையொன்றில் இருந்து திருடப்பட்டதாகவும், அதை மீண்டும் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வாள்கள் உள்ளிட்ட பல கூர்மையான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் விசாரணைகளில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள், நீர் மோட்டார்கள் மற்றும் இரும்புப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களை திருடி விற்பனை செய்ததுடன், ரூ. 30,000 பணத்தை கொள்ளையடித்த சம்பவங்களிலும் இவர் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. குறைந்தது ஆறு தனித்தனி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.