‘கிளீன் ஸ்ரீலங்கா’ மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் வழிகாட்டலில் 322 சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள் உருவாக்கம்

69

‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து, ஒழுக்கமான மற்றும் நேர்மையான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் “சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள்” வேலைத்திட்டம் நேற்று திங்கட்கிழமை [16 மார்ச் 2026] களுத்துறை மாவட்டத்தின் சிவ்தெவிகம கிராமத்தை மையமாகக் கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் தலைமையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய உற்பத்தித்திறன் செயலகம், அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து இந்த தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறது. “தேசத்தை கட்டியெழுப்பும் செழிப்பான கிராமம்” என்ற தொனிப்பொருளின் கீழ் மூன்று ஆண்டு திட்டமாக இது செயல்படுத்தப்படுவதுடன், கல்வி மேம்பாடு, பொருளாதார அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் துப்புரவு, சமூக நல்வாழ்வு, கலாசாரம் மற்றும் ஆன்மீக வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய ஆறு முக்கிய துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ முயற்சியின் அடிப்படை நோக்கமான ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சுத்தமான, நிலையான சூழலை கிராம மட்டத்திற்கு கொண்டு செல்ல அரசு எதிர்பார்க்கிறது. முறையான கொள்கை வழிகாட்டலின் கீழ் முழு அரச பொறிமுறையையும் பயன்படுத்தி, நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் உற்பத்தித்திறன் மிக்க மாதிரி அலகாக மாற்றுவது இந்த வேலைத்திட்டத்தின் எதிர்கால இலக்காகும். இந்நிகழ்வில் பல அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.