களுவாஞ்சிக்குடியில் அழுகிய கோழி இறைச்சி பறிமுதல்: வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

171

களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட கோழி இறைச்சி கடையொன்றில், ஏற்கனவே இறந்த கோழிகளின் 57.5 கிலோ கிராம் இறைச்சி குளிர்சாதன பெட்டியில் விற்பனைக்காக வைத்திருந்தமை சித்திரை புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை (14) கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வியாபாரிக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் உள்ள இறைச்சிக் கடைகளில் விசேட உணவு பாதுகாப்பு திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

சோதனையின் போது மனிதர் பாவனைக்கு உதவாத நிலையில் இருந்த இறைச்சி குளிர்சாதனத்தில் சேமித்து விற்பனை செய்யத் தயாராக வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் த. கஜானன் குறித்த வியாபாரிக்கு கடும் எச்சரிக்கை வழங்கியதுடன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து அழுகிய கோழி இறைச்சியும் உடனடியாக அழிக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகள் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்தும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.