கல்விச் சமூகத்தின் வலுவான குரல் – “அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம்” மாணவர்கள் களத்தில்!

132

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக கையெழுத்து போராட்டம் நேற்று ஆரம்பம்.

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்க என்ற பெயரில் வரும்  புதிய சட்ட வரைவை எதிர்த்தும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கக் கோரியும் “பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினரால் கையெழுத்து சேகரிப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியம் ஆகியவை இணைந்து இந்த இயக்கத்தை முன்னெடுத்து வருகின்றன. இயக்கத்தின் முக்கிய கோரிக்கையாக, “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” என முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்ட வரைவை முழுமையாக மீளப் பெற வேண்டுமெனவும், தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) உடனடியாக நீக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று (19) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்கள், பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் 12 அமர்வுகளாக கையெழுத்துகள் சேகரிக்கப்படவுள்ளன.

மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக பொதுமக்களின் ஆதரவுடனும் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விச் சமூகத்தின் இந்த முயற்சி, அரசின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான ஜனநாயகக் குரலாகக் கருதப்படுவதுடன், நாட்டின் பிற பகுதிகளிலும் இதேபோன்ற எதிர்ப்புச் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.