கற்பிட்டி கடற்கரையில் 170 கிலோ முந்திரி உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் பறிமுதல்.!

174

கற்பிட்டி குடாவ கடலோரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (31) கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைவிடப்பட்ட பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இலங்கை கடற்படைக் கப்பல் விஜயவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், கடற்கரையில் கைவிடப்பட்டிருந்த 13 சந்தேகத்திற்கிடமான பொதிகள் பரிசோதிக்கப்பட்டன.

இதில் சுமார் 170 கிலோகிராம் முந்திரி பருப்பு, 180 சவர்காரக் கட்டிகள், 90 கிலோகிராம் ஏலக்காய், பூச்சிக்கொல்லி திரவம் நிரப்பப்பட்ட 169 சிறிய போத்தல்கள் மற்றும் பூஞ்சைக்கொல்லிகள் அடங்கிய 90 பொதிகள் மீட்கப்பட்டன.

கடற்படையினரின் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக கடத்தல்காரர்கள் பொருட்களை கரைக்குக் கொண்டு வர முடியாமல் அவற்றை கடலோரப் பகுதியில் கைவிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன; இதன் மூலம் கடத்தல் செயல்பாடுகள் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.