கன்சைட் முகாம் வழக்கு : முன்னாள் கடற்படை வீராங்கனைகள் இருவருக்கு விளக்கமறியல்.!!

110

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் அமைந்திருந்த தடுப்பு முகாமில் இருந்து 2008ஆம் ஆண்டு இரண்டு பெண்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை வீராங்கனைகளை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, குறித்த இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் நேற்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது.

2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இரு கடற்படை வீராங்கனைகளும் நேற்று முன்தினம் (20) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் 05ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், இவ்விருவருக்கான அடையாள அணிவகுப்பை ஒக்டோபர் 5ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை 2008ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி திருகோணமலை, பாலையூற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த தேன்மொழி சசிகுமார் மற்றும் மேரி டெலிசியா ஆகிய இரு பெண்களும் வெள்ளை வானில் வந்த கடற்படையினரால் கடத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் ‘கன்சைட்’ முகாமில் தடுத்து வைக்கப்பட்டதுடன், அதன்பின்னர் இரு பெண்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

இக்கொலைகளை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், சந்தமாலி மற்றும் காவோஸ் எனும் பெயர்களால் அறியப்படும் இரண்டு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் அந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.