கனடா வாழ் செட்டிகுளம் மக்களை ஒருங்கிணைக்க புதிய அமைப்பு

128

“செட்டியூர் மக்கள் பேரவை – கனடா” உருவாக்கத்திற்கான ஆலோசனைக் கூட்டம் ஸ்காப்ரோவில்

கனடா வாழ் செட்டிகுளம் பிரதேச மக்களை ஒருங்கிணைத்து, சமூக ஒற்றுமை மற்றும் மக்கள் நலனை வலுப்படுத்தும் நோக்கில் “செட்டியூர் மக்கள் பேரவை – கனடா” என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக, 07.09.2026 அன்று ஸ்காப்ரோ நகரில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் உள்ளிட்ட செட்டிகுளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, முன்மொழியப்படுகின்ற அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள், நோக்கங்கள் மற்றும் சமூகப் பணிகள் தொடர்பில் தங்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைத்தனர்.

கனடா வாழ் செட்டிகுளம் மக்களிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துதல், சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் தேவைப்படும் மக்களுக்கு இயன்றளவு உதவிகளை வழங்குதல் ஆகியவை அமைப்பின் முக்கிய நோக்கங்களாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, செட்டிகுளம் பிரதேசத்தின் பண்பாட்டு, கல்வி மற்றும் பௌதிக வளங்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதுடன், கிராமத்தின் இயற்கை வளங்கள் மற்றும் நில வளங்களைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளையும் எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கு அமைப்பு திட்டமிட்டுள்ளது.

செட்டிகுளம் பிரதேச மக்களின் நலனையும், சமூக ஒற்றுமையையும் மையப்படுத்தி செயற்படவுள்ள “செட்டியூர் மக்கள் பேரவை – கனடா” அமைப்பு, எதிர்வரும் காலத்தில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.