கனடாவில் தொழிலாளர்களை துன்புறுத்திய தமிழ் கடை உரிமையாளர்கள் – சிறைத்தண்டனை

176

கனடாவில் புலம்பெயர் தொழிலாளர்களை துன்புறுத்திய 3 உணவக உரிமையாளர்களுக்கு சிறைத் தண்டனை.

கனடாவின் அல்பெர்டா மாகாணம், கல்கரியில் உள்ள மூன்று உணவக உரிமையாளர்கள், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்தி மோசடி செய்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளனர். மெரினா தோசை மற்றும் தந்தூரி கிரில் எனும் உணவகங்களின் உரிமையாளர்களான மணிகண்டன் காசிநாதன், சந்திரமோகன் மர்ஜாக், மேரி ரோச் எனும் மூவருக்கும் தலா 90 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெருந்தொகை இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்களால் மோசடி செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்களுக்கும் மொத்தம் 44,000 டொலர் இழப்பீடாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வந்த தொழிலாளர்களிடம் குடியேற்றம் தொடர்பான செயல்முறைகளுக்காக தலா 24,000 கனடிய டொலர் வரை கட்டணம் கேட்டும் பணம் செலுத்தாவிடில் “திருப்பி அனுப்பப்படுவீர்” என அச்சுறுத்தியதாக நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையில் தொழில் வழங்குநர்கள் அரசு நிர்ணயித்துள்ள சிறிய கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டும், தொழிலாளர்களிடம் பணம் கேட்கவே முடியாது என்பதே சட்டம்.

 

இந்த வழக்கு, கனடாவில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களின் முக்கியத்துவத்தையும், துன்புறுத்தலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.