கண்டியில் காணாமல் போன 22 வயது யுவதி கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்பு: சந்தேகநபர் கைது.!

42

கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரங்கல பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 22 வயதுடைய வாசனா சந்தமாலி வீரசேகர என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அவர் காணாமல் போனதாக சில நாட்களுக்கு முன்பு முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைகளின் போது, யுவதி காணாமல் போனதாக முறைப்பாடு செய்த நபர் வழங்கிய தகவல்களில் முரண்பாடுகள் காணப்பட்டதால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. பின்னர் சந்தேகநபரின் குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், யுவதி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் வீட்டிற்கு அருகிலுள்ள சேற்று நிலப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது. நீதிமன்ற அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், சுமார் மூன்று அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலம் மீட்கப்பட்டது.

சம்பவத்திற்குப் பின்னர் தப்பிச் சென்றிருந்த பிரதான சந்தேகநபர் தனது வீட்டிற்கு திரும்பிய நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது அவர் விஷம் அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், திருமணமான குறித்த நபர் கடந்த நான்கு ஆண்டுகளாக உயிரிழந்த யுவதியுடன் நெருங்கிய உறவில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.