கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11.34 கோடி மதிப்புள்ள குஷ் போதைப்பொருள்: ஒருவர் கைது.!

177

இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் திங்கட்கிழமை (06.04.2026) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராகும்.

இவர் இன்று காலை 06.50 மணியளவில் ஏஐ-277 விமானம் மூலம் நாட்டை வந்தடைந்த நிலையில், போதைப்பொருள் அடங்கிய பயணப் பொதியை விமான நிலையத்தின் பொதி வழங்கும் பகுதியில் கைவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர்கள் அவரை உடனடியாக மடக்கிப் பிடித்துள்ளனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பயணப் பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோகிராம் 340 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.