கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல்: 4 பேர் கைது.!

130

சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற நால்வர் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவையின் நுமு-648 என்ற விமானம் மூலம் வந்தடைந்த இவர்களை, கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றபோது சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 33 வயதுடைய கொழும்பைச் சேர்ந்த ஒருவரும், கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தில் பணியாற்றும் ஒரு பெண் உட்பட மூன்று சீனப் பிரஜைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘மென்செஸ்டர்’ ரகத்தைச் சேர்ந்த 88,000 சிகரெட்டுகள் அடங்கிய 440 கார்ட்டூன்கள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சட்டவிரோத இறக்குமதிகளை தடுக்கும் நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.