ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மருந்துகளை கடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!

83

இந்தியாவிலிருந்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் பெங்களூருவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸின் 6E-1183 என்ற விமானம் மூலம் வந்தடைந்த பயணிகளே இவ்வாறு சிக்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களில் 18 முதல் 25 வயதுக்குள் மூன்று இளைஞர்களும், 45 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் 8 பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 65 கிலோகிராம் எடையுள்ள தடுப்பூசிகள், மருந்துக் குளிசைகள், மாத்திரைகள் மற்றும் கிறீம் வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இம்மருந்துகளுக்கு சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதி பெறப்படவில்லை என்பதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட மருந்துப் பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் இத்தகைய சட்டவிரோத மருந்து கடத்தல்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.