ஒமந்தை சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளிக்கு 15 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை.!!

61

வவுனியா ஒமந்தை பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில், அவளது தாயின் சகோதரரான 47 வயது நபருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ.அ. ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ வழக்கை முன்னெடுத்த நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு எதிரியானவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்ற ஒப்புதலை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்படி, முதலாவது குற்றச்சாட்டுக்கு 15 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் மற்றும் தவறின் 6 மாத சாதாரண சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவிடப்பட்டதுடன், தவறின் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. இரண்டாவது குற்றச்சாட்டிற்கும் 15 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், இரு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.