ஐபிஎல் தொடக்கப் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி; கோஹ்லி – படிக்கல் அதிரடி.!

144

19ஆவது ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டியில், பெங்களூருவில் உள்ள எம். சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

202 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி, 15.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களை எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் விரைவில் விக்கெட் இழந்தாலும், விராட் கோஹ்லி மற்றும் தேவ்டத் படிக்கல் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 101 ஓட்டங்கள் சேர்த்து அணியை மீட்டனர். படிக்கல் 61 ஓட்டங்கள் எடுத்தார்; கோஹ்லி 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார்.

மேலும், ரஜாத் பட்டிதார் மற்றும் டிம் டேவிட் ஆகியோரும் தங்களின் அதிரடி பங்களிப்பால் வெற்றியை எளிதாக்கினர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 201 ஓட்டங்கள் எடுத்தது. இஷான் கிஷான் 80 ஓட்டங்களுடன் சிறப்பாக விளையாடினார். அவருக்கு ஆதரவாக ஹென்றிச் க்ளாசன் 31 ஓட்டங்களும், அனிக்கெட் வர்மா 43 ஓட்டங்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் ஜேக்கப் டவி 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்கள் கைப்பற்றி பெங்களூரு அணிக்கு முக்கிய முன்னிலை ஏற்படுத்தினார். இந்த வெற்றியுடன், ஐபிஎல் 2026 தொடக்கத்தை பெங்களூரு அணி சிறப்பாக ஆரம்பித்துள்ளது.