எரிவாயு தட்டுப்பாடு வருமா? – லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு.!

102

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் (Litro Gas Lanka Limited) இன்று வெளியிட்ட அறிக்கையில், உலக அளவில் ஏற்பட்டுள்ள பதட்டங்கள் மற்றும் எரிசக்தி சந்தை சவால்களுக்கு மத்தியிலும், இலங்கையில் உள்நாட்டு எரிவாயு (LPG) விநியோகம் முழுமையாக நிலையாகவும் தொடர்ச்சியாகவும் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் தகவலின்படி, சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்டு செயல்படும் ஜியோகாஸ் (Geogas) நிறுவனத்திடமிருந்து எரிவாயு பொருட்கள் பெறப்பட்டு வருகின்றன.

இவை அமெரிக்காவின் பால்ஸ்போரோ (Ballsboro) பகுதியிலிருந்து கடல் வழியாக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.

மாதாந்தம் திட்டமிட்ட கால அட்டவணையின்படி எரிவாயு கப்பல்கள் வந்து சேர்வதால், நாடு முழுவதும் தடையற்ற மற்றும் நம்பகமான விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

“உலக அளவிலான புவிசார் அரசியல் பதட்டங்கள், ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கிய கடல் பாதைகளில் ஏற்படும் சவால்கள் ஆகியவை எரிவாயு சந்தையை பாதிக்கும் நிலையில், எமது மாற்று வழித்தடங்கள் மற்றும் நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் இலங்கை மக்களுக்கு தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்தியுள்ளோம்.

தற்போது போதுமான இருப்பு உள்ளது மற்றும் எதிர்காலத்தில் வரவிருக்கும் கப்பல்களும் திட்டமிட்டபடி வரும்.

மக்கள் தேவையின்படி தினசரி சுமார் 1,100 மெட்ரிக் டன்கள் வழங்கப்படும் நிலையில், தேவை அதிகரிக்கும் போதெல்லாம் கூடுதல் விநியோகத்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பீதி வாங்குதல் தேவையில்லை எனவும், சந்தை நிலைமை சீராக உள்ளதாகவும் லிட்ரோ வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மக்களின் அன்றாட சமையல் தேவைகளை பாதுகாக்கும் வகையில் லிட்ரோ கேஸ் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.