எரிபொருள் பீதியால் மீண்டும் QR முறை.!

130

ஈரானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து இலங்கையில் சிலர் தேவையற்ற அளவில் எரிபொருளை சேமித்து வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால், மீண்டும் QR முறை அமல்படுத்த வேண்டிய நிலை உருவாகக்கூடும் என எரிசக்தி துணை அமைச்சர் அக்ரம் இலியாஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதைக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதால் மக்கள் பீதியடைய வேண்டாம் என அவர் வலியுறுத்தினார். வழக்கத்தை விட அதிகமாக எரிபொருள் கொள்வனவு செய்வது விநியோக வலையமைப்பின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி தேவையற்ற சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது 37 நாட்களுக்கு போதுமான பெட்ரோல், 35 நாட்களுக்கு டீசல், 47 நாட்களுக்கு விமான எரிபொருள் மற்றும் 30 நாட்களுக்கு மேற்பட்ட சூப்பர் டீசல் கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், அடுத்த சில மாதங்களுக்கான எரிபொருள் ஓடர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து எரிபொருள் வரவழைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இலங்கை தனது பெரும்பாலான எரிபொருளை சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளிலிருந்து கொள்வனவு செய்வதால், தற்போதைய சர்வதேச சூழ்நிலை விநியோகத்தில் உடனடி பாதிப்பை ஏற்படுத்தாது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் கொள்கலன்களில் அதிகளவில் எரிபொருள் சேமிக்க முயற்சித்தால், அது விநியோக அமைப்பை சீர்குலைக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். இதன் காரணமாக, கொள்கலன்களில் எரிபொருள் நிரப்புவதை கட்டுப்படுத்த காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், விநியோக நடவடிக்கைகள் இடையூறு இன்றி தொடர பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் விடுமுறைகள் கூட இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது எரிபொருள் விநியோகம் வழக்கம்போல நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.