எரிபொருள் பதுக்கல். விலையேற்றத்திற்கு காரணம் – CPC தலைவர் விளக்கம்

149

போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு CPC வேண்டுகோள்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழ்நிலை காரணமாக உருவாகியுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில், நாட்டின் பொதுமக்கள் அனைவரும் எரிபொருளை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா இதனை தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் எரிபொருள் பயன்பாட்டை இயன்றவரை குறைக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தேவையற்ற அச்சத்தினால் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்து சேமித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான அதிகப்படியான கொள்வனவும், தட்டுப்பாடு குறித்த அச்சமும் தற்போதைய எரிபொருள் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலை ஏற்பட்டிருக்காவிட்டால், இம்மாத இறுதி வரை பழைய விலையிலேயே எரிபொருளை விநியோகிக்க முடிந்திருக்குமெனவும் தலைவர் குறிப்பிட்டார்.

இது இலங்கைக்கு மட்டும் அல்லாமல், உலகம் முழுவதற்கும் சவாலான காலகட்டமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் கூட்டுப் பொறுப்புடன் செயல்படாவிட்டால், எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளையும் ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும் என டி.ஜே. ராஜகருணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.