ஊடகவியலாளருக்கு மரண அச்சுறுத்தல்: கிளிநொச்சி ஊடக அமையம் கடும் கண்டனம்.!

139

கிளிநொச்சி ஊடகவியலாளர் தர்மலிங்கம் பரமசிவன் (சிவா) அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் குறித்து கிளிநொச்சி ஊடக அமையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அச்சுறுத்தல் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான ஊடகவியலாளர்களின் பணியை முடக்குவதற்கான முயற்சியாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைப்பின் அறிக்கையில், சமூக நலனை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட கருத்துக்காக ஒரு ஊடகவியலாளரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பது ஊடக சுதந்திரத்திற்கு எதிரானதாகும் என்றும், இது ஊடக சமூகத்தை அச்சுறுத்தி மௌனப்படுத்தும் திட்டமிட்ட முயற்சி என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த மிரட்டல் தொடர்பாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், அச்சுறுத்தல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் மெத்தனப்போக்கு குறித்து கடும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம் உண்மையை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களை மௌனப்படுத்த முடியாது என்பதையும், எதிர்காலத்தில் நீதியை நிலைநாட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.