உலககிண்ணத்துக்கு அதிரடியாக தயாராகும் SSC மைதானம்.

191

ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை 2026 போட்டிகளுக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, கொழும்பு சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (SSC) மைதானத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து இன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஊடக சுற்றுப்பயணத்தை நடத்தியது.

இந்த உலகக் கோப்பை தொடரின் முக்கிய போட்டி மைதானங்களில் ஒன்றாக SSC தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு 2026 பெப்ரவரி 7ஆம் திகதி நடைபெறவுள்ள தொடக்கப் போட்டியில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன. இதற்கு மேலாக மேலும் நான்கு உலகக் கோப்பை போட்டிகளும் SSC மைதானத்தில் நடத்தப்பட உள்ளன.

ஊடக சுற்றுப்பயணத்தின் போது, ஸ்ரீலங்கா கிரிக்கெட் கௌரவ பொருளாளர் சுஜீவ கோடலியட்ட மற்றும் SSC கிரிக்கெட் தலைவர் சமந்த டொடன்வேல ஆகியோர், மைதானத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்திப் பணிகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்தனர்.

அந்த வகையில், சர்வதேச தரத்திற்கேற்ற நவீன LED விளக்கொளி (Floodlight) அமைப்பு முக்கிய மேம்பாட்டாக அமையவுள்ளது. மொத்தமாக 630 LED விளக்குகள், ஆறு உயரமான கோபுரங்களில் பொருத்தப்பட்டு, மைதானம் முழுவதும் சமமான வெளிச்சம் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஒளி மினுக்கு மற்றும் நிழல் பிரச்சினைகள் குறைவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, வீரர்களின் உடைமாற்ற அறைகள் மேம்படுத்தப்படுவதுடன், போட்டி நடுவர், மூன்றாவது அம்பயர் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கான புதிய அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், ஒளிபரப்பு கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் கருத்துரையாளர் அறைகள் உள்ளிட்ட வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை 2026 தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கான முழுமையான தயாரிப்புகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.