உடலில் மறைத்து கொக்கைன் கடத்தல்: வெளிநாட்டுப் பெண் கைது!

139

கொக்கைன் போதைப்பொருளை தனது உடலில் மறைத்துக்கொண்டு இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (12) காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் உகண்டா நாட்டைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் வர்த்தகர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் உகண்டாவின் கம்பாலா நகரிலிருந்து புறப்பட்டு கட்டாரின் தோஹா நகரம் வழியாக கத்தார் ஏர்வேஸ் கியு.ஆர்-664 விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உடலில் 21 மாத்திரைகளாக மறைத்து வைத்திருந்த 274 கிராம் கொக்கைன் மீட்கப்பட்டது.

இதன் பெறுமதி சுமார் 1 கோடியே 23 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் கூடுதலாக கொக்கைனை உருண்டைகளாக விழுங்கியிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த பெண் மேலதிக மருத்துவ பரிசோதனை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.