உகாண்டா தேர்தல் நிறைவு; ஏழாவது முறையாக முசேவேனி வெற்றி!

180

உகாண்டா தேர்தல் முடிவுகளின் படி  71 சதவீத வாக்குகளைப் பெற்று யோவேரி முசேவேனி வெற்றி பெற்றுள்ளார். உகாண்டாவின் ஜனாதிபதியாக யோவேரி முசேவேனி ஏழாவது முறையாகவும், தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உகாண்டாவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 81 வயதான யோவேரி முசேவேனி, 71.65 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட 43 வயதான பாபி வைன் 24.72 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுமார் 4.5 கோடி மக்கள் தொகை கொண்ட உகாண்டாவில், இந்த முறைத் தேர்தலில் 2.16 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.

எனினும் 52 சதவிகிதத்தினர் மாத்திரமே வாக்களித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1986ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, யோவேரி முசேவேனி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆளுங்கட்சியான முசேவேனியின் தேசிய எதிர்ப்பு இயக்கக் கட்சி, வயது மற்றும் பதவிக்கால வரம்புகளை நீக்குவதற்கு அரசியலமைப்பை பல முறை மாற்றியதன் மூலம் முசேவேனியின் பதவியும் தக்கவைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.