“ஈரானின் தாக்குதல்கள் 2009 நினைவுகளை எழுப்புகின்றன” – சிறீதரன் எம்.பி

195

ஈரானின் தற்போதைய போக்கு ஈழத்தமிழர் இனப்படுகொலையை மீண்டும் நினைவூட்டுகிறது – சிறீதரன் எம்.பி

ஈரான் இஸ்ரேல் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்கள், 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களை மீண்டும் நினைவூட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

“சுதந்திரப் பறவைகள்” மகளிர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பன்னாட்டு மகளிர் தின நிகழ்வில் முதன்மை அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்வதேச போர் விதிகளை மீறி, இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்திய கொத்துக்குண்டுத் தாக்குதல்களைப் போலவே, தற்போது ஈரான் இஸ்ரேல் மீது அதே வகையான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அவர் கவலை வெளியிட்டார்.

மேலும், ஈழப் போராட்ட வரலாற்றில் பெண்கள் வெறும் சாட்சிகளாக மட்டுமல்லாது, போராளிகளாகவும் குடும்பத்தை தாங்கும் தூண்களாகவும் விளங்கியதாக அவர் நினைவூட்டினார். இன்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக பல ஆண்டுகளாக வீதியில் போராடி வரும் தாய்மார்களின் உறுதியையும் அவர் சுட்டிக்காட்டினார்.

2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் நிகழ்ந்த கொத்துக்குண்டுத் தாக்குதல்களின் சிதைவுகளையும் ஆதாரங்களையும் உலகுக்கு வெளிப்படுத்தியதில் ஈழத் தமிழ் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது ஈரான் அதனை எதிர்த்ததையும், அமெரிக்கா ஆதரவு வழங்கியதையும் நினைவில் கொண்டு எதிர்காலத்தில் இராஜதந்திர அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு “மண்ணின் மாதவம்” எனும் உயரிய விருதும் வழங்கப்பட்டது.

சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் தலைவி திருமதி கணேஸ்குமார் கிறேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வட மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.