இலங்கை மத்திய வங்கியில் களவு; 6 பேர் கைது.!!

204

அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் 16 மாடிகளைக் கொண்ட பழைய கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்னல் கடத்தி (Lightning Conductor) அமைப்பின் செப்பு கம்பிகளை திருடிய குற்றச்சாட்டில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட கம்பிகளில் சுமார் 30 கிலோ கிராம் எடையுள்ள பகுதி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட மொத்த செப்பு கம்பிகளின் நீளம் 288 மீற்றர் எனவும், அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 42 இலட்சம் ரூபாய் எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிருவாகத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஒருவரால் கடந்த மாதம் 27 ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.