இலங்கை உயர் நீதிமன்றத்தில் மின்னணு வழக்கு தாக்கல் முறை: காகிதமற்ற விசாரணைக்கு புதிய யுகம்!

160

இலங்கை நீதித்துறை வரலாற்றில் முக்கிய மாற்றமாக, இலங்கை உயர் நீதிமன்றம் வழக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்து காகிதமற்ற முறையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த e-filing முறைமை 2026 பிப்ரவரி 10 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளதுடன், சட்டத்தரணிகள் மின்னணு முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் முறைமையின் ஒரு முக்கிய கட்டமாக, 2026 மார்ச் 26 அன்று உயர் நீதிமன்றத்தில் முதல் காகிதமற்ற வழக்கு விசாரணை நடைபெற்றது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையில், நீதியரசர்கள் டிஜிட்டல் வழக்குக் கோப்புகளை கணினி மூலம் பயன்படுத்தினர்.

இது 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட 3 மில்லியன் ரூபாய் நட்டஈட்டை செலுத்தத் தவறியதற்கான நீதிமன்ற அவமதிப்பு வழக்காகும். வழக்கின் குற்றப்பத்திரிகை மின்னணு கையொப்பத்துடன் வெளியிடப்பட்டதுடன், மேலதிக விசாரணை 2026 மே 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

“ஈ கோட்” திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறைமை, இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த செலவில், விரைவான மற்றும் திறமையான வழக்குத் தாக்கல் முறையை செயல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முறைமை அனைத்து நீதிமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும், இது வெளிநாட்டு செலவினங்களைக் குறைத்து நீதித்துறையின் டிஜிட்டல் மாற்றத்தை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.