இலங்கையை பிராந்திய ஏற்றுமதி மையமாக மாற்ற ஜப்பான் இணக்கம்.

150

இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளைப் புதியதொரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் வகையில், முன்மொழியப்பட்ட ‘இலங்கை-ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடத்தை’ (Sri Lanka-Japan Export Industrial Corridor) நிறுவுவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜப்பானியப் பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் மட்சுவோ டகெஹிகோ தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், நேற்று(17.02.2026) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாகவே இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்று, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மேலதிக சாத்தியக்கூறுகளை ஆராய ஜப்பானிய அரசாங்கம் மற்றும் அந்நாட்டுத் தொழில்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த முன்மொழியப்பட்ட வழித்தடத்தின் மூலம், சர்வதேச ஏற்றுமதிச் சந்தையை இலக்காகக் கொண்ட பெருமளவிலான உற்பத்திகளுக்கான முதலீடுகளை இலங்கைக்கு ஈர்ப்பதே பிரதான நோக்கமாகும்.

இத்திட்டத்தின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும்.

பிராந்திய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக இலங்கைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும். சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையின் முதலீட்டுத் துறையில் ஜப்பானிய வர்த்தகச் சமூகத்தினரிடையே மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ இசொமாடா, ஜப்பான்-இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் தலைவர் புமிஹிகோ கொபயாஷி உள்ளிட்ட ஜப்பானியப் பிரதிநிதிகளும், இலங்கையின் சார்பில் வர்த்தக அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.