“இலங்கையைக் காப்போம்” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்: மின்சார சிக்கனத்துக்கு மக்களுக்கு அழைப்பு!

146

வலு சக்தியை சிக்கனமாகப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “இலங்கையைக் காப்போம்” தேசிய வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வலுசக்தி வளங்களை பாதுகாக்கும் பொறுப்புணர்வுடைய சமூகத்தை உருவாக்குவதே இந்த திட்டத்தின் பிரதான இலக்காகும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் மற்றும் வலுசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள், மேலும் எதிர்கால “எல்-நினோ” வானிலை மாற்றங்களின் தாக்கங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் Clean Sri Lanka திட்டத்தின் ஒரு பகுதியாக, “இலங்கையைக் காப்போம் – ஒன்றிணைவோம் – ஒளியேற்றுவோம்” என்ற தொனிப்பொருளில் இது செயல்படுத்தப்படுகிறது. அரச மற்றும் தனியார் துறைகள், சிவில் சமூகங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் இதில் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் அடுத்த ஐந்து மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் நிலையில், மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின்சார பயன்பாட்டை குறைப்பதற்கும், அதிக மின்சாரம் தேவைப்படும் பணிகளை பகல் நேரங்களில் மேற்கொள்ள மக்களை ஊக்குவிக்கப்படுகிறது.

மின்சார பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்றாலும், நீர்மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு நீர் பயன்பாட்டிலும் சிக்கனம் கடைபிடிக்க வேண்டியது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி மக்கள் மனப்பாங்கில் மாற்றத்தை உருவாக்கி, தேசிய வலுசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.