இலங்கைக்கு அவசர ரஷ்ய எரிபொருள் கொள்வனவு: அரசாங்கம் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.

156

அவசர எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய இலங்கைய அரசு ரஷ்யாவுடனும் [13 மார்ச் 2026] பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் வெள்ளிக்கிழமை அமைச்சில் கலந்துரையாடல் நடைபெற்றது. மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல்கள் மற்றும் எரிபொருள் விநியோகக் கட்டமைப்பின் சீர்குலைவின் பின்னணி காரணமாக, இலங்கை ரஷ்ய எரிபொருட்களை கொள்வனவு செய்வது குறித்து புதிய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டதாவது, ரஷ்ய எரிபொருட்களை கொள்வனவு செய்ய தடைகள் நீக்கப்பட்டதற்குப் பிறகு இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாகும். ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன், இலங்கைக்கு தடையின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான விரிவான கோரிக்கையை ரஷ்ய அரசாங்கத்திற்கு உடனடியாகத் தெரிவிக்கும் என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றும் உறுதி செய்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். ரஷ்யாவின் ஆதரவு எந்த நேரத்திலும் கிடைக்கும் என்பதை தூதுவர் சுட்டிக்காட்டியதால், இலங்கையின் அவசர எரிபொருள் தேவையை விரைவாக பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்பட வாய்ப்புள்ளது.