இடமாற்றம் கோரி யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் போராட்டம்!

163

வெளிமாவட்டங்களில் 08 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தங்களுக்கு இடமாற்றம் வழங்க கோரி, வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் பட்டியலிடப்பட்ட இடமாற்றங்களை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாகும்.

ஆசிரியர்கள் தெரிவிப்பதாவது, வருடா வருடம் இடமாற்றங்கள் வழங்கப்பட்டாலும், 01.01.2026 அன்று வழங்கப்பட வேண்டிய இடமாற்றங்கள் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை. சிலரின் சுயநல காரணங்களால் இந்த இடமாற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சின் விதிமுறைகளுக்கு இணங்க தாங்கள் கடமைகளை நிறைவேற்றியிருந்த போதிலும் தங்களது உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலை தொடர்ந்தால் ஆசிரியர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதோடு கல்வித்துறையிலும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். சுயநல தலையீடுகளை தவிர்த்து, உரிய அதிகாரிகள் உடனடியாக இடமாற்றங்களை வழங்கி தங்களுக்கு நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.