ஆண்டின் முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் அனுப்பல் அதிகரிப்பு.!!

115

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட பணப்பரிமாற்றம் கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 26.5 சதவீதத்தினால் உயர்ந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோள் காட்டி பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 2.294 பில்லியன் அமெரிக்க டொலர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நாட்டிற்கு கிடைத்துள்ளது.

இதன்படி, ஜனவரி மாதத்தில் 751 மில்லியன் டொலர்களும், பெப்ரவரி மாதத்தில் 729 மில்லியன் டொலர்களும் மற்றும் மார்ச் மாதத்தில் 815 மில்லியன் டொலர்களும் கிடைத்துள்ளன. 2025 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் வெளிநாட்டு  தொழிலாளர்கள் மூலம் பெறப்பட்ட தொகை  1815 மில்லியன் டொலர்கள் ஆகும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்புதல் இவ்வாறு உயர்வதற்கு, அரசின் நிதி மீதான நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுடன், புலம்பெயர் தொழிலாளர்கள் பணத்தை அனுப்ப சட்ட பூர்வமான வழிமுறைகளைப் பயன்படுத்துவதை பணியகம் ஊக்குவித்தமையும் காரணமாக அமைந்துள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் இறுதி வரை 62,145 பேர் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.