அரச வைத்தியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தம் அறிவிப்பு.!!

186

அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றதாகக் கூறப்படும் வைத்தியர் இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை செவ்வாய்க்கிழமை (31) காலை 08.00 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் நடத்த தீர்மானித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

அந்த சந்திப்பில் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய கருத்து தெரிவிக்கையில், முன்னறிவிப்பு இன்றி சட்டவிரோதமாகவும் அரசியல் நோக்கங்களுடனும் வைத்தியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர் என குற்றஞ்சாட்டினார்.

இதற்கென விசேட பட்டியல் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற நடவடிக்கை முன்பு இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு நாடு தழுவிய வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடமாற்றங்களை நிறுத்துவதற்காக நாளை காலை வரை அரசாங்கத்திற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கு இணக்கம் இல்லாவிட்டால் வேலைநிறுத்தம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வேலைநிறுத்தத்தின் போது அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் இடம்பெறும் எனவும் சங்கம் உறுதியளித்துள்ளது.