அமெரிக்க சட்டமா அதிபர் பாம் பொண்டி நீக்கம்: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு

181

அமெரிக்காவின் சட்டமா அதிபர் பாம் பொண்டி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டதுடன், ட்ரம்ப்பின் நீண்டகால விசுவாசியாகக் கருதப்பட்ட பொண்டியின் நீக்கம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாம் பொண்டியின் பதவிக்காலத்தில் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை கையாள்ந்த விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. எப்ஸ்டீனுடன் தொடர்புடையவர்களின் பட்டியலை வெளியிடுவதாக கூறியிருந்த போதிலும், பின்னர் அத்தகைய பட்டியல் இல்லை என நீதித்துறை தெரிவித்தது.

மேலும், மில்லியன் கணக்கான கோப்புகளை வெளியிடுமாறு ட்ரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்ததும், பொண்டிக்கு எதிரான அதிருப்தியை அதிகரித்தது. கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற பாராளுமன்றக் குழு விசாரணையில், ஜனநாயகக் கட்சி உறுப்பினரை “தோற்றுப்போனவர்” என விமர்சித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பாம் பொண்டிக்கு பதிலாக அவரது முன்னாள் துணை அதிகாரியான டாட் பிளான்ச் புதிய தலைமை சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பொண்டி தனியார் நிறுவனத்தில் இணையவுள்ளதாகவும், அங்கிருந்து ட்ரம்ப்பிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் உள்நாட்டு பாதுகாப்புத் துறைத் தலைவர் கிறிஸ்டி நோம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில வாரங்களிலேயே நீக்கப்படும் இரண்டாவது உயர் அதிகாரியாக பொண்டி மாறியுள்ளார்.