அமெரிக்கா–ஈரான் போர்நிறுத்தம்: உலக எண்ணெய் விலைகள் கடும் வீழ்ச்சி.!

87

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிபந்தனையுடன் கூடிய இருவார கால போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விலைகள் கணிசமாக குறைந்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக முக்கியமான ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, பெஞ்ச்மார்க் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை சுமார் 15.9 சதவீதம் குறைந்து, ஒரு பீப்பாய் 92.30 அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்தது. அதேபோல், அமெரிக்க WTI எண்ணெய் விலை 16.5 சதவீதம் சரிந்து, 93.80 அமெரிக்க டொலர்களாக குறைந்தது. ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், ஹோர்மூஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

எனினும், கடந்த பெப்ரவரி 28ஆம் திகதிக்கு முன் எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 70 அமெரிக்க டொலர்களாக இருந்ததை ஒப்பிடுகையில், தற்போதைய வீழ்ச்சிக்குப் பிறகும் விலைகள் இன்னும் உயர்ந்த நிலையில் உள்ளன. எதிர்காலத்தில் போர்நிறுத்த நிலைமை தொடருமா என்பதையே எண்ணெய் விலைகளின் நிலை தீர்மானிக்கும் என பொருளாதார வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.