அமெரிக்காவுக்கு எதிரான போரில் ‘வரலாற்று வெற்றி’ என ஈரான் அறிவிப்பு – மத்திய கிழக்கில் அமைதி வாய்ப்பு?

88

மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றத்தையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹோர்மூஸ் நீரிணையை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். “இன்றிரவு முழு நாகரீகம் அழியக்கூடும்” என கடுமையாக எச்சரித்த அவர் நிர்ணயித்த காலக்கெடு இன்று அதிகாலை 5.30 மணியுடன் முடிவடைய இருந்தது. இதற்கிடையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷரீப் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, அமெரிக்கா தாக்குதல் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த ஒப்புக்கொண்டது.

இதன்படி, டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துவதாக அறிவித்தார். இது இருதரப்பு போர்நிறுத்தமாக அமையும் எனவும், ஈரானுடன் நீண்டகால அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஈரானிடமிருந்து 10 அம்சங்களைக் கொண்ட முன்மொழிவு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

மறுபுறம், ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்த நிலையை “வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி” என அறிவித்து, அமெரிக்கா தங்களது பல கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணை கட்டுப்பாடு, செறிவூட்டல் உரிமைகள் மற்றும் தடைகள் நீக்கம் உள்ளிட்ட விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும், அனைத்து கோரிக்கைகளும் முழுமையாக ஏற்கப்பட்டால்தான் போர் முற்றிலும் முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த முன்னேற்றங்கள் மத்திய கிழக்கில் நீண்டகால அமைதிக்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.