அநுராதபுரத்தில் உர பதுக்கல் குற்றச்சாட்டு: வர்த்தகர்களை கைது செய்ய விசேட சுற்றிவளைப்பு.!

69

அநுராதபுரம் மாவட்டத்தில் செயற்கையான உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் உரத்தைப் பதுக்கி வைத்துள்ள வர்த்தகர்களைக் கைது செய்ய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தேசிய உரச் செயலகத்தின் அநுராதபுரம் மாவட்ட உதவிப் பணிப்பாளர் பந்துலரத்ன வெளியிட்டுள்ளார்.

சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சில வர்த்தகர்கள் உரத்தை பதுக்கி வைத்து தட்டுப்பாட்டை உருவாக்கி வருவதாக விவசாய சங்கங்கள் மூலம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உரச் செயலகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து தேசிய உரச் செயலகத்தின் சுற்றிவளைப்புப் பிரிவு அதிகாரிகள் களத்தில் இறக்கப்பட்டு, மாவட்டத்தின் 22 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்படும் உர மூட்டைகள், கமநல சேவை மத்திய நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உர தட்டுப்பாட்டை கட்டுப்படுத்துவதுடன், விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரம் கிடைக்கச் செய்வது எதிர்பார்க்கப்படுகிறது; மேலும் சட்டவிரோத பதுக்கலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.